செய்யாறில் ஓடும் பேருந்தில் இளைஞர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சனிக்கிழமை பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சனிக்கிழமை பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் காளத்தியின் மகன் சதீஷ்குமார் (28). டிப்ளமோ படித்துள்ள இவர், காஞ்சிபுரத்தில் பழைய கார், மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவரது பெற்றோர் கடந்த 2 மாதங்களாக செய்யாறு வேல்சோமசுந்தரம் நகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். பெற்றோரைப் பார்ப்பதற்காக சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் செய்யாறுக்கு வந்தார். சௌந்தரி திரையரங்கம் பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 7 பேர் சதீஷ்குமாரை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அந்த வழியாக செய்யாறு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் சதீஷ்குமார் ஏறினார். இருப்பினும், மர்ம நபர்கள் பேருந்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி. நேரில் விசாரணை: திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கொலை நிகழ்ந்த இடம், தனியார் பேருந்து ஆகியவற்றைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் மீது இரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலையாளிகளும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க ஏடி.எஸ்.பி. தலைமையில், மூன்று டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் பயணம் செய்த கார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com