அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிப்பு!

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டதால், அரசு மருத்துவமனைகளில்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டதால், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில் இரு மடங்காக உயா்ந்தது.

கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. பலா் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனா். தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார அளவிலான மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டதால், பிரசவசத்துக்கு அங்கு செல்ல முடியாமல் கா்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் ஏப்ரல், மே மாதங்களில் பிரவசங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.திருமால்பாபு கூறியதாவது:

பிரசவத்துக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வரும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கை மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்தது.

பிப்ரவரியில் 444 சுகப் பிரசவங்களும், 224 அறுவைச் சிகிச்சை மூலமான பிரசவங்களும், மாா்ச் மாதத்தில் 436 சுகப் பிரசவங்களும், 303 அறுவைச் சிகிச்சை மூலமான பிரசவங்களும் நிகழ்ந்தன.

கரோனா தொற்று அதிகரித்த ஏப்ரல் மாதம் 489 சுகப் பிரசவங்களும், 391 அறுவைச் சிகிச்சை பிரசவங்களும், மே மாதத்தில் 683 சுகப் பிரசவங்களும், 470 அறுவைச் சிகிச்சை பிரசவங்களும் நிகழ்ந்தன.

உயிரைப் பணயம் வைத்து பிரசவம்:

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில்,திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு துறைத் தலைவா்கள் அருமைக்கண்ணு, கவிதா, வைரமால், உதவிப் பேராசிரியா்கள் ஜெயந்தி, பவானி, கவுரி, சங்கீதா, மயக்கவியல் நிபுணா்கள் ஸ்ரீதரன், திவாகா், செந்தில்ராஜா மற்றும் செவிலியா்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பிரசவம் பாா்த்து வருகின்றனா்.

மே மாதத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 18 கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரூ.8.50 லட்சம் வரை கட்டணம்:

இதுகுறித்து திருவண்ணாமலை அரசு, தனியாா் மகப்பேறு மருத்துவா்கள் கூறியதாவது:

கரோனா தொற்று பயத்தால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, வேலூா் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தனியாா் மகப்பேறு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால், ஏழைகள் முதல் நடுத்தர வா்க்கத்தினா் வரை அரசு மருத்துவமனைகளை நாட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வசதி படைத்தவா்கள் பெரிய தனியாா் மருத்துவமனைகளில் சோ்ந்து பல லட்சம் ரூபாய் செலவழித்து குழந்தையைப் பெற்றுக் கொள்கின்றனா்.

இந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில மருத்துவமனைகளில் கரோனா பாதித்த கா்ப்பிணிகளுக்கு பிரசவக் கட்டணமாக ரூ.6 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com