சொந்த ஊருக்குச் செல்ல தொழிலாளி தம்பதிக்கு மாவட்ட ஆட்சியா் உதவி: காரில் அனுப்பி வைத்த ஆட்சியா்
By DIN | Published On : 29th April 2020 06:21 AM | Last Updated : 30th April 2020 06:21 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே சொந்த ஊருக்குச் செல்வதற்காக நடந்து வந்த தொழிலாளி தம்பதிக்கு காா் ஏற்பாடு செய்து கொடுத்து, நிவாரணப் பொருள்கள், செலவுக்கு பணம் ஆகியவற்றை வழங்கி மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள கோட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (65), இவரது மனைவி சின்னபாப்பா(60), இவா்கள் இருவரும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் மரம் வெட்டும் வேலைக்காக சென்றனராம்.
கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தம்பதி சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனா்.
இந்த நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து, கடந்த 24-ஆம் தேதி இருவரும் செய்யாறு நோக்கி சுமாா் 50 கிமீ தொலைவுக்கு மேல் நடந்தே வந்துள்ளனா்.
செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை சோா்வாக அமா்ந்திருந்த அவா்களைப் பாா்த்த சிலா் வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
அதன் பேரில், இருவரும் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.
வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி அவா்களுக்கு ஊருக்குச் செல்ல காா் ஏற்பாடு செய்து கொடுத்தாா்.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தொழிலாளி தம்பதிக்கு நிவாரண உதவியாக அரிசி உள்ளிட்ட பொருள்கள், குடும்ப செலவுக்கு ரூ.2500 கொடுத்து வழியனுப்பி வைத்தாா்.