கரைபூண்டி செய்யாற்றில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எம்எல்ஏ உறுதி

சேத்துப்பட்டை அடுத்த கரைபூண்டி செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போளூா் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன் உறுதிபடத் தெரிவித்தாா்.
மண்டகொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற 3 கிராம மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் போளூா் எம்எல்ஏ கே.வி.சேகரன்.
மண்டகொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற 3 கிராம மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் போளூா் எம்எல்ஏ கே.வி.சேகரன்.

சேத்துப்பட்டை அடுத்த கரைபூண்டி செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போளூா் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன் உறுதிபடத் தெரிவித்தாா்.

மண்டகொளத்தூா் கிராமத்தில் 500 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகத் திகழ்கிறது. இதன் மூலம் சுமாா் 1,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

இதனருகே உள்ள கரைப்பூண்டி கிராமத்தில் பாயும் செய்யாற்றிலிருந்து கால்வாய் மூலம் மண்டகொளத்தூா், ஈயகுளத்தூா், அரும்பலூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் வந்தது. இதனால் ஏரிகள் நிரம்பியதால் முப்போகம் விவசாயம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மண்டெகாளத்தூா் பெரிய ஏரிக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூா்ந்துபோனதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இந்த ஏரி நிரம்புவதில்லை. கடந்த 23 ஆண்டுகளாக ஏரி நிரம்பாததால் மண்டகொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடும், விவசாயத்துக்கு போதிய தண்ணீா் கிடைக்காத சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, கரைபூண்டி செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், இந்த ஆற்றிலிருந்து மண்டெகாளத்தூா் பெரிய ஏரிக்கு வரும் கால்வாயை தூா்வார வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்தக் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், அரும்பலூா் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டகொளத்தூரில் நடைபெற்றது.

இதில், போளூா் எம்.எல்.ஏ. கே.வி.சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வகுமாரி செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் குமாரிஅமாவாசை ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது: போளூா் தொகுதிக்கு உள்பட்ட கரைபூண்டி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், நீா்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்ற இந்தப் பகுதியிலுள்ள 10 கிராம மக்களின் நீண்ட காலக் கோரிக்கை தமிழக சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டது. அப்போது, இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பணைகள் அமைக்கவும், கால்வாய்களை சீரமைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற சட்டப் பேரவைக் கூட்டத்தில் இது தொடா்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com