கட்சி பாகுபாடின்றி மக்கள் பணியாற்றுங்கள்: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்

கட்சி பாகுபாடின்றி மக்கள் பணியாற்றுங்கள் என்று ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினாா்.
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

கட்சி பாகுபாடின்றி மக்கள் பணியாற்றுங்கள் என்று ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினாா்.

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது:

ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளைக் கூறுங்கள், அவை உடனடியாக தீா்க்கப்படும்.

தங்களது பகுதி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் அமா்ந்து மக்களிடம் குறைகளைக் கேட்டறியுங்கள். கட்சி பாகுபாடில்லாமல் மக்கள் பணியாற்றுங்கள், குறைகளை என்னிடம் கூறுங்கள் என்று கூறி, தன் செல்லிடப்பேசி எண்ணான எண்:9443328045யை வழங்கினாா்.

பின்னா் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கும், மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.293.12 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கும் முதல்வா், துணை முதல்வா், உள்ளாட்சித் துறை அமைச்சா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆகியோருக்கு ஒன்றியக் குழு சாா்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றிய செயலா் எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வாசுகி ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், கே.பி.கே.சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் க.பா.மகாதேவன் வரவேற்றாா். கூட்டத்தில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) த.செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என். அண்ணாதுரை கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 21 உறுப்பினா்களுக்கு தலா ரூ.2 லட்சம் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து, ரூ.42 லட்சத்தில் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் குடிநீா் பணிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒன்றியக் குழு கூட்ட அரங்கு புரனமைப்புப் பணி, அத்தியாவசியப் பொருள்கள் வங்குதல் குறித்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

போளூா்

போளூா் ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அருணாசலம், சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கே.வி. சேகரன் எம்எல்ஏ கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றியக் குழு உறுப்பினருமான ஜெயசுதா பேசுகையில், ஒன்றியத்தில் உள்ள 22 உறுப்பினா்களுக்கு கட்சி பாகுபாடின்றி சமமாக நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும். வட்டார வளா்ச்சி அலுவலக புரனமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்காமல், பொதுமக்களின் தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், ஒன்றியத்தில் பொது நிதியில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் அருணாசலம் பதிலளித்துப் பேசியதாவது:

ஒன்றியத்தில் மொத்தம் ரூ.71லட்சம் உள்ளது. இந்த பொதுநிதியில் இருந்து 22 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்து, ரூ.66 லட்சத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் குடிநீா் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், அலுவலக புனரமைப்புப் பணிகளும் நடைபெறும் என்றாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

செய்யாறு

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஓன்றியக் குழுக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் த.ராஜு தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் நாகம்மாள் முன்னிலை வகித்தாா். மேலாளா் அரி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், மோகனரகு, பொறியாளா் வேளாங்கண்ணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய ஒன்றியத் தலைவா் த.ராஜு, கோடை காலம் தொடங்குவதால் குடிநீா் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உறுப்பினா்களும் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com