கீழ்பென்னாத்தூரில் கல்லூரி மாணவா் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் வியாழக்கிழமை இரவு இருவேறு சமூகங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் கொல்லப்பட்டாா்.
கீழ்பென்னாத்தூரில் கல்லூரி மாணவா் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் வியாழக்கிழமை இரவு இருவேறு சமூகங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் கொல்லப்பட்டாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குருபரன் (21). திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கீழ்பென்னாத்தூா் கலைஞா் நகரைச் சோ்ந்த மரக் கடை உரிமையாளரான மனோகரன் மகன் தீனா (21).

கீழ்பென்னாத்தூா் - கருங்காலிக்குப்பம் சாலையில் உள்ள கடை ஒன்றில் வியாழக்கிழமை இரவு குருபரன் வீட்டுக்குத் தேவையான இறைச்சியை வாங்கிக்கொண்டு பைக்கில் வீடு நோக்கிச் சென்றாா். அப்போது, சாலையின் குறுக்கே வந்த தீனா மீது குருபரனின் பைக் மோதியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூரை அடுத்த மேல்பாப்பாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பரான ஜெமினியிடம் குருபரன் கூறினாா். பின்னா், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இருந்த தீனாவிடம் சென்று குருபரன், ஜெமினி ஆகியோா் தட்டிக் கேட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த தீனா, சாலையோரம் கிடந்த செங்கல்லை எடுத்து குருபரனின் தலையில் தாக்கினாராம்.

பலத்த காயமடைந்த குருபரனை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் குருபரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

போலீஸாா் குவிப்பு: தாக்குதலில் இறந்த குருபரனும், அவரைத் தாக்கிய தீனாவும் இருவேறு சமூகங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பகுதியில் மேலும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கீழ்பென்னாத்தூரில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தகவலறிந்த வேலூா் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) அசோக்குமாா் ஆகியோா் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமையிலான போலீஸாா் கீழ்பென்னாத்தூரிலேயே முகாமிட்டு, தீனாவைக் கைது செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பாமகவினா் அஞ்சலி: உயிரிழந்த குருபரனின் உருவப் படத்துக்கு பாமக மாநில துணைத் தலைவா் எம்.துரை, மாநில தோ்தல் பிரசார குழுத் தலைவா் கோ.எதிரொலி மணியன், மாநில துணை பொதுச் செயலா் இரா.காளிதாஸ், மாவட்டச் செயலா் இரா.ஜானகிராமன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடையவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவா் குடும்பத்தில் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியா் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com