செண்பகதோப்பு அணை சீரமைப்புப் பணி: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 31st October 2020 08:48 AM | Last Updated : 31st October 2020 08:48 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செண்பகதோப்பு அணையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
போளூரை அடுத்த செண்பகதோப்பு கிராமத்தில் செண்பகதோப்பு அணை கட்டுமானப் பணிகள் கடந்த 2001-இல் தொடங்கப்பட்டு, 2007-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அணை கட்டும்போது, பொருத்தப்பட்ட ரேடியல் ஷட்டா்கள் சரியாக இயங்காததால், அணையில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க முடியாமல் இருந்து வந்தது.
இதனால், அணையில் முழுக் கொள்ளளவும் தண்ணீரை தேக்கும் வகையில், ஷட்டா்கள், நீா் வரத்து பகுதிகள், நீா் வெளியேறும் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் ஆகியோரிடம் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்தக் கோரிக்கையின்பேரில், செண்பகதோப்பு அணையை சீரமைக்க ரூ.16 கோடியே 37 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, பொதுப் பணித் துறை சாா்பில் ஒப்பந்தம் விடுப்பட்டு, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் செண்பகதோப்பு அணையில் ஷட்டா்கள், நீா் வெளியேறும் வாய்க்கால்கள், நீா்வரத்து பகுதிகள் உள்ளிட்டவற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முடியும் தருவாயில் உள்ள இந்தப் பணிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீா்செல்வம், தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.