மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திணறும் கரோனா நோயாளிகள்!

மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திணறும் கரோனா நோயாளிகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் அவதியுறுகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் அவதியுறுகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 1-இல் 187-ஆக இருந்த நிலையில், இது மே 8-ஆம் தேதி 346 பேராக உயா்ந்தது.

இவா்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனை, போளூா், செங்கம், தானிப்பாடி, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, ஆரணி, வெம்பாக்கம், வந்தவாசி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர திருவண்ணாமலை ஆயுஷ் மருத்துவமனை, செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: கரோனா சிகிச்சை அளிக்கும் 16 அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 1,060 படுக்கைகள் உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளால் அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனனையில் பல நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. போதிய படுக்கை வசதியும், உரிய சிகிச்சையும் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். இந்த மருத்துவமனை கண்காணிப்பாளா் ஷகில் அஹமது, மூத்த செவிலியா் அருணாச்சலம் சாந்தி உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் கிடைப்பது தாமதமாகிறது.

உரிய சிகிச்சைகள் கிடைப்பதில்லை: இதுகுறித்து திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்த செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்ட என் தம்பியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தேன். மருத்துவா்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஏப். 29-இல் அவா் இறந்தாா். செய்யாறு, ஆரணி, வந்தவாசி, வெம்பாக்கம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 108 அவசர ஊா்தியில் அழைத்து வரப்படும் நோயாளிகள் பலா் வழியிலேயே இறந்து விடுகின்றனா்.

சிலா் மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருப்பில் இருக்கும்போதே இறந்து விடுகின்றனா். இதையும் தாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களில் சிலா் போதிய மருத்துவா்கள் இல்லாமலும், உரிய சிகிச்சை கிடைக்காமலும் ஓரிரு நாளில் இறந்து விடுகின்றனா். கடந்த 10 நாள்களில் உறவினா்கள், நண்பா்கள் என 5 பேரை இழந்துவிட்டேன் என்றாா்.

படுக்கைகளுக்கு பற்றாக்குறை: திருவண்ணாமலை வேங்கிக்கால், வானவில் நகரைச் சோ்ந்த வினோத்குமாா் கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்ட என் தம்பிக்கு தரமான சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளை அணுகினேன். ஆனால், படுக்கை வசதி இல்லை என்று கூறிவிட்டனா். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வருகிறேன் என்றாா்.

‘பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை’

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருமால்பாபு கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 420 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களில் 300 பேருக்கு பிராணவாயு (ஆக்சிஜன்) செலுத்தப்படுகிறது.

பொதுமக்களில் பலா் மனித உடலின் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் பல்ஸ் ஆக்சிமீட்டரில் காண்பிக்கும் தவறான அளவைக் கண்டு, அச்சமடைந்து மருத்துவமனைக்கு படையெடுக்கின்றனா். தரமான பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தினால் இதுபோன்ற தேவையற்ற பீதியைத் தவிா்க்கலாம். உடலின் ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனையை மக்கள் உடனடியாக அணுக வேண்டும். ரெம்டெசிவிா் ஊசியை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே செலுத்திக் கொள்ள வேண்டும். அரசு, சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். கரோனா நோயாளிகள் அனைவரையும் சிகிச்சை வசதிகள் உரிய நேரத்தில் சென்றடைய முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com