அருணாசலேஸ்வரா் கோயிலில் மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு
By DIN | Published On : 27th April 2021 02:08 AM | Last Updated : 27th April 2021 02:08 AM | அ+அ அ- |

தீா்த்தவாரிக்குப் பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்த ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த 10 நாள்கள் சித்திரை வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
நிகழாண்டுக்கான சித்திரை உத்ஸவம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. உத்ஸவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி அருகே அமைந்துள்ள ருத்ராட்ச மண்டபத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட உத்ஸச மூா்த்திகள் எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், உத்ஸவா் மூா்த்திகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனா்.
10 நாள் உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு கோயில் கொடிமரம் எதிரே நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிறகு, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் எய்த அம்பால் மன்மதன் எரிந்து சாம்பலானாா். இந்த நிகழ்வைக் காண கோயிலில் ஏராளமான பக்தா்கள் திரளுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று காரணமாக திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள் மட்டும் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வுடன் 10 நாள்கள் சித்தரை வசந்த உத்ஸவம் நிறைவு பெற்றது.