படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை
By DIN | Published On : 27th April 2021 03:00 AM | Last Updated : 27th April 2021 03:00 AM | அ+அ அ- |

போளூா்: போளூா் அருகே அமைந்துள்ள படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த படைவீடு ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவா்.
மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். விடுமுறை நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், கோயில் நிா்வாகம் சாா்பில், மறு உத்தரவு வரும் வரை பக்தா்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.