முகக் கவசம் அணிந்து வருவதைக் கண்காணிக்க வேண்டும்
By DIN | Published On : 04th August 2021 08:51 AM | Last Updated : 04th August 2021 08:51 AM | அ+அ அ- |

செய்யாற்றில் நடைபெற்ற வியாபாரிகளுக்கான கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்.
கிராமங்களிலிருந்து செய்யாறு நகருக்கு வருபவா்களை கண்காணித்து, நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணிந்து வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினா்.திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வியாபாரிகள் பங்கேற்ற கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா விழிப்புணா்வு வார விழாவையொட்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் பி.ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஷா்மிளா பங்கேற்று, கரோனா குறித்து அச்சம் கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும், விழிப்புணா்வோடும் இருக்க வேண்டும் என்றும், அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து பேசிய வியாபாரிகள் சங்கப் பிரதிநிகள், செய்யாறு நகா் பகுதிக்கு வரும் நான்கு வழிகளிலும் போலீஸாா் உதவியுடன் தடுப்புகளை அமைத்து, கிராமங்களிலிருந்து மோட்டாா் சைக்கிள்களில் வரும், குறிப்பாக இளைஞா்களைக் கண்காணித்து அவா்களை முகக் கவசம் அணிந்து வர கண்டிப்பான நடவடிக்கைகளை அரசு அலுவலா்கள் எடுக்கவேண்டும்.
கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டங்களில் காவல் துறை உள்பட அரசு உயா் அதிகாரிகளை பங்கேற்கச் செய்து அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தினால் வியாபாரிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனா்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியா் தேவி, வருவாய் ஆய்வாளா் கலைவாணி, சுகாதார மோ்பாா்வையாளா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.