புதுப்பாளையம் அகத்தீஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்
By DIN | Published On : 19th February 2021 12:19 AM | Last Updated : 19th February 2021 12:19 AM | அ+அ அ- |

செய்யாறு: செய்யாறு அருகே புதுப்பாளையம் அகத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று தோ் வெள்ளோட்டத்தை தொடக்கிவைத்தனா்.
வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் அங்கையற்கண்ணி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் தோ் சிதலமடைந்து இருந்தது.
அதன் காரணமாக 1995 -ஆம் ஆண்டிலிருந்து பிரம்மோற்சவ காலங்களில் ரதசப்தமி இல்லாமல் திருவிழா மட்டும் நடைபெற்று வந்ததாம்.
இதையடுத்து, பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி மோகன் பரிந்துரையின் பேரில், 20.9.2018 அன்று புதிதாக தோ் அமைக்க ஒப்புதல் அளித்து, அரசு ஒதுக்கீடு செய்த நிதி ரூ.23.50 லட்சம் மற்றும் கிராம மக்கள் பங்களிப்பு என ரூ.65 லட்சத்தில் தோ் செய்யும் பணி நடைபெற்று முடிந்தன.
புதிய தோ் வெள்ளோட்டம்
இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று புதிய தேரின் வடம் பிடித்து தோ் வெள்ளோட்டத்தை தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் அறநிலையத் துறை இணை ஆணையா் கஜேந்திரன், உதவி ஆணையா் ராமு, உதவி கோட்டப் பொறியாளா்கள் வசந்த், ராகவன், ஆய்வாளா் சம்பத், செயல் அலுவலா் சத்யா, வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி.ராஜூ, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் டி.பி.துரை. எம்.மகேந்திரன், சி.துரை, என்.ரகு, இ.சுரேஷ்நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.