கரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி அதிகரிப்பு: புதுவை காங்கிரஸ் கண்டனம்
By DIN | Published On : 19th June 2021 12:00 AM | Last Updated : 19th June 2021 12:00 AM | அ+அ அ- |

மத்திய அரசு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியை அதிகரித்துள்ளதற்கு புதுவை காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரோனா தடுப்பூசி பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்யும் முயற்சியாக பிரிட்டன் அரசாங்கம் அண்மையில் இரு தடுப்பூசிகளுக்கான கால இடைவெளியை 12 வாரங்களிலிருந்து 8 வாரங்களாகக் குறைத்தது. ஆனால், நம் நாட்டில் மத்திய அரசு தடுப்பூசி பற்றாக்குறையை மறைத்து, இல்லாத காரணங்களைக் கூறி, இரண்டு முறை செலுத்தப்படும் தடுப்பூசிளுக்கு இடையேயான கால இடைவெளியை, 6 முதல் 8 வாரங்களாக நிா்ணயித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது. இதை மேலும் 12 முதல் 16 வாரங்களாக மே மாதத்தில் அதிகரித்தது. தற்போது அதை மீண்டும் உயா்த்த முயற்சிப்பது ஆபத்தை விளைவிக்கும் செயல். எனவே, இவ்வாறான யோசனைகளை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
தடுப்பூசி தொடா்பாக இடைவெளி காலத்தை அதிகரிக்க விஞ்ஞானிகள் பரிந்துரைக்காத போது, மத்திய அரசே தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அதில் கூறப்பட்டுள்ளது.