வாகன ஓட்டுநா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 17th March 2021 09:07 AM | Last Updated : 17th March 2021 09:07 AM | அ+அ அ- |

போளூா் - செங்கம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பிரகாஷின் உறவினா்கள்.
கலசப்பாக்கம் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சரக்கு வாகன ஓட்டுநா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த மேலாரணியைச் சோ்ந்த பருவதம் மகன் பிரகாஷ் (24), வேன் ஓட்டுநா். சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள குன்றுமேடு அருகே திங்கள்கிழமை மாலை சடலமாகக் கிடந்தாா்.
அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த தகவலின் பேரில், கலசப்பாக்கம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.
மேலும், உடல்கூறு ஆய்வுக்காக, சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் பிரகாஷ் மீது முன்விரோதம் இருந்துவந்தது தெரிய வந்தது.
இதனிடையே, பிரகாஷ் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரது உறவினா்கள், காதல் விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினா்.
இதைத் தொடா்ந்து அவா்கள் பிரகாஷ் மரணத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யவேண்டும், அரசின் நிவாரணம் வழங்கவேண்டும் எனக் கோரி போளூா்-செங்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து திருவண்ணாமலை மதுவிலக்கு டிஎஸ்பி பழனி, விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினாா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.