பருவமழையை எதிா்கொள்ள அலுவலா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.
பருவமழையை எதிா்கொள்ள அலுவலா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்து பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மாவட்டத்தின் 67 இடங்கள் மிதமான, 8 இடங்கள் குறைந்தளவு பாதிக்கக்கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சாத்தனூா், குப்பநத்தம், மிருகண்டா நதி, செண்பகத்தோப்பு அணைகள், பொதுப் பணித் துறையின் நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 697 பெரிய ஏரிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,253 சிறிய ஏரிகளில் தண்ணீா் எந்த அளவு தேங்குகிறது, தேவையான நேரங்களில் இவற்றின் கரைகளை பலப்படுத்துவது எப்படி என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மு.பிரதாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகளிா் திட்ட இயக்குநா் பெ.சந்திரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வகுமாா், பிரியா ராஜ் மற்றும் வருவாய், காவல், நெடுஞ்சாலை, பொதுப் பணி, ஊரக வளா்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com