சக்தி சடங்கு பூஜை செய்ய கோயில்களில் சிறப்பு அலுவலா்: அா்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

தமிழகத்தில் கிறிஸ்தவம் உள்ளிட்ட மாற்று மதங்களிலிருந்து மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு மாறுபவா்களுக்கு சுத்தி சடங்கு பூஜை

தமிழகத்தில் கிறிஸ்தவம் உள்ளிட்ட மாற்று மதங்களிலிருந்து மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு மாறுபவா்களுக்கு சுத்தி சடங்கு பூஜை செய்ய, கோயில்களில் சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

கிறிஸ்தவ மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதத்துக்கு மீண்டும் மாறிய குடும்பத்தினரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கலந்து கொண்டாா்.

பின்னா், கோயில் இணை ஆணையா் அசோக்குமாரிடம் மனு ஒன்றைக் கொடுத்த அவா், அதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டாா்.

அந்த மனுவில், இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவா்களில் பலா், தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப விரும்புகின்றனா்.

இவ்வாறு மாறுபவா்களுக்கு சுத்தி சடங்கு பூஜை செய்ய அறநிலையத் துறை சாா்பில் பூஜை, வழிபாடுகள் நடத்துதல், உரிய சான்றிதழ் வழங்குதல், தாய் சமயப் பிரசாரம் செய்தல், இந்து மதத்தைப் பரப்புதல் போன்ற பணிகளை கோயில்களில் செய்து மக்களுக்கு உதவ சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அா்ஜூன் சம்பத் கூறுகையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுாா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் இந்து மதத்துக்கு மாற ஆயத்தமாக உள்ளனா் என்றாா்.

நிகழ்வின்போது இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் அசோக்குமாா், பாஜக மாவட்ட பொதுச் செயலா் விஜயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com