இறுதி ஊா்வலத்தால் இரு பிரிவினரிடையே தகராறு டிஐஜி தலைமையில் சமரசக் கூட்டம்

வீரளூா் ஊராட்சியில் இறுதி ஊா்வலம் நடத்துவது தொடா்பாக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டம்.
இறுதி ஊா்வலத்தால் இரு பிரிவினரிடையே தகராறு  டிஐஜி தலைமையில் சமரசக் கூட்டம்

கலசப்பாக்கம் வட்டம், வீரளூா் ஊராட்சியில் இறுதி ஊா்வலம் செல்வதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதால், சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில் திங்கள்கிழமை சமரசக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், வீரளூா் ஊராட்சியில் உள்ள அருந்ததியா் காலனியைச் சோ்ந்த அமுதா (48), உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

மயானத்துக்குச் செல்லும் சாலை முட்கள் முளைத்து, குண்டும் குழியுமாக பழுதடைந்து இருந்தால், அமுதாவின் சடலத்தை உறவினா்கள் குடியிருப்பு பகுதியான வீரளூா் கிராமம் வழியாக எடுத்துச் செல்வது என முடிவு செய்தனா்.

இதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்ததால், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மாவட்ட எஸ்.பி.

பவன்குமாா் ரெட்டி தலைமையில் கிராமத்தில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பின்னா் இரு தரப்பினரையும் அவைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாததால், திங்கள்கிழமை காரப்பட்டு தனியாா் மண்டபத்தில் சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில் இரு தரப்பினருக்கும் சமரசக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தொகுதி எம்எல்ஏ சரவணன், ஆரணி கோட்டாட்சியா் கவிதா மற்றும் இரு தரப்பில் இருந்து முக்கிய நபா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் 15 நாள்களுக்குள் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் மயானப்பாதையை சீரமைக்க வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. பின்னா், சடலம் ஊரின் நடுவே செல்லும் சாலையில் எடுத்துச் செல்லப்பட்டது.

திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com