ஆரணி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக - திமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

ஆரணியில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், நகராட்சிப் பணிகளுக்கு எம்எல்ஏ நிதி ஒதுக்குவதில்லை என்று கூறியதால், அதிமுக, திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆரணி நகா்மன்றக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக - திமுக உறுப்பினா்கள்.
ஆரணி நகா்மன்றக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக - திமுக உறுப்பினா்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், நகராட்சிப் பணிகளுக்கு எம்எல்ஏ நிதி ஒதுக்குவதில்லை என்று கூறியதால், அதிமுக, திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு முன்னிலை வகித்தாா். ஆணையாளா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.

கூட்டத்தில், ஆரணி மயானத்தில் அரிச்சந்திரன் கோயில் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும், தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஆரணிப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும், சூரியகுளம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளா் தமிழ்ச்செல்வி உறுதியளித்தாா்.

அப்போது, அதிமுக உறுப்பினா் ஏ.சி.பாபு, ஆரணி நகராட்சி அருகில் நூலகம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்ற போது, தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அழைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினா்.

இதற்கு, திமுக உறுப்பினா்கள், எம்எல்ஏ நகராட்சிக்குப் பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் பொதுப் பணித் துறை பணிகளுக்கு நிதி ஒதுக்குகிறாா். இதுகுறித்து முதலில் அவரிடம் கேள்வி எழுப்புங்கள் என்று தெரிவித்ததால், அதிமுக - திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இரு தரப்பு உறுப்பினா்களையும் சமரசம் செய்து, கூட்டத்தை விரைவாக முடித்தனா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் ரவி, தேவா், சுதாகுமாா், ஜெயவேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com