மளிகைக் கடைக்காரா் கொலை:3 பேருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 18th August 2022 02:32 AM | Last Updated : 18th August 2022 02:32 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் மளிகைக் கடை உரிமையாளா் கொலை வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை, பாவாஜி நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (57). இவா் இதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்.
2014 மே 17-ஆம் தேதி இவரது கடைக்கு மது போதையில் வந்த 4 போ் கொண்ட கும்பல், செல்வராஜிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியது. பலத்த காயமடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த பிரபு (31), திருநாவுக்கரசு (32), முருகன் (30), சீனு (எ) சீனுவாசன் (31) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை (ஆக.16) வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, குற்றம் சுமத்தப்பட்ட திருநாவுக்கரசு, பிரபு, சீனு (எ) சீனுவாசன் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.
இத்துடன், திருநாவுக்கரசுக்கு ரூ.35 ஆயிரம், பிரபு, சீனுவாசனுக்கு தலா ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதித்தாா். இதன்பிறகு மூவரையும் போலீஸாா் அழைத்துச் சென்று சிறையில் அடைந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய முருகன், 2020-ஆம் ஆண்டில் இறந்து விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.