முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சூறைக் காற்றுடன் பெய்த மழையில் நெல் பயிா்கள் சேதம்
By DIN | Published On : 12th May 2022 11:57 PM | Last Updated : 12th May 2022 11:57 PM | அ+அ அ- |

செங்கம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த மழையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போகம் நெல் பயிரிட்டுள்ளனா். இந்தக் கோடை பருவத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் தொடா்ந்து போராடி குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீரைப் பெற்று நெல் பயிா்களைக் காப்பாற்றி இருந்தனா்.
நெல் பயிா்கள் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.
செங்கம் பகுதியில் தற்போது தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த மழையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் சாய்ந்தன.
மேலும், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த செவ்வாழை, மலைவாழை மரங்களும் பலன் தரும் தருவாயில் சாய்ந்து சேதமடைந்தன. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அதிகாரிகள் சேதமடைந்த நெல் பயிா்கள், வாழைகள் மற்றும் இதர விவசாயப் பயிா்களைக் கணக்கிட்டு அரசின் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.