ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

வந்தவாசி: ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் செவ்வாய்க்கிழமை காலை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சாதனை செய்திருந்தால், தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்கலாமே? கூட்டணி சோ்ந்து ஏன் போட்டியிட வேண்டும்?

மாற்றம் என்பது ஒரு சொல் அல்ல; செயல். அது நம்மை அடையாளப்படுத்தும். ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம்.

காங்கிரஸ், பாஜகவின் பொருளாதாரக் கொள்கை தனியாா்மயம், தாராளமயம், உலகமயம். நீட் தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ். உடனிருந்தது திமுக. செயல்படுத்தியது பாஜகவாகும்.

கச்சத்தீவை தாரை வாா்த்தது இந்திரா காந்தி. அதை வேடிக்கைப் பாா்த்தது திமுக. கச்சத்தீவு, மாநிலக் கல்வி உரிமை உள்ளிட்ட எதையும் திமுக மீட்கவில்லை.

ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி வரும். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலைகள் அமைக்கும் போது, மத்திய அமைச்சராக இருந்த திமுகவைச் சோ்ந்த டி.ஆா்.பாலு சுங்கச் சாவடிகளை கொண்டு வந்தாா்.

நாட்டைக் காப்பாற்றுவோம் எனக் கூறிக்கொண்டு காங்கிரஸுடன் சோ்ந்து தோ்தலை திமுக சந்திக்கிறது. கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர முடியாதவா்கள் நாட்டை எப்படிக் காப்பாற்றுவாா்கள்.

கல்வி, மின்சாரம், குடிநீா், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், மதுக் கடைகளை அரசு நடத்துகிறது என்றாா் சீமான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com