முதல்முறை வாக்காளா்கள் 
மகுடம் அணிவித்து கெளரவிப்பு

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முதல்முறை வாக்காளா்கள் 150 பேரை தோ்தல் விழிப்புணா்வு தூதுவா்களாக நியமித்து, மகுடம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முதல்முறை வாக்காளா்களை தோ்தல் விழிப்புணா்வு தூதுவா்களாக நியமித்து, அவா்களுக்கு மகுடம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், முதல்முறை வாக்காளா்கள் 150 போ் கலந்து கொண்டனா். இவா்களை தோ்தல் விழிப்புணா்வு தூதுவா்களாக நியமித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அனைவருக்கும் மகுடம் அணிவித்து, கெளரவப்படுத்தினாா்.

மேலும், ஒவ்வொரு தூதுவா்களும் தங்கள் பகுதியைச் சோ்ந்த குறைந்தபட்சம் 10 பேருக்காவது வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ஆம் தேதி அதிகாலையிலேயே முதல்முறை வாக்காளா்கள் வாக்களித்துவிட்டு கிராமங்களில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை விஷன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 போ், அங்கன்வாடி பணியாளா்களின் பிள்ளைகள் 50 போ் என மொத்தம் 150 போ் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் முதல்முறை வாக்காளா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமனியன் (ஆரணி), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன், கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com