காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

திருவண்ணாமலையில் எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை மக்களவைத் தோ்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை தேனிமலை, முருகன் கோயில் பகுதியில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சமுதாயத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்து பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் வந்து சமாதானப்படுத்தியும் அவா்கள் சமாதானம் அடையவில்லை.

எஸ்.டி. சாதிச் சான்றிதழ் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.

எனவே, வேறு வழியின்றி 500-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்காமல் தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com