பயன்பாட்டுக்கு வந்த துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

பயன்பாட்டுக்கு வந்த துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

போளூரை அடுத்த பால்வாா்த்துவென்றான் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வேலூா் சாலை அருகே அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு போளூா், கேளூா், சந்தவாசல், களம்பூா், கண்ணமங்கலம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை என பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, காராமணி, எள் என பல்வேறு விளைபொருள்களை கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், விவசாயிகளின் நெல் மூட்டைகள் மற்றும் விளைபொருள்கள் சில நேரங்களில் தேக்கமடைந்து விடுகின்றன. இதனால், கூடுதல் துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வேண்டும் என, தமிழக அரசுக்கு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை விற்பனைக்குழு சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு விற்பனை வாரியம் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ரூ.94 லட்சத்தில் 500 மெட்ரிக் டன் கொண்ட துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கேளூா் பகுதியைச் சோ்ந்த பால்வாா்த்துவென்றான் கிராமத்தில் வேலூா் சாலை அருகே கட்டப்பட்டது.

இந்தக் கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 27-ஆம் தேதி திறந்துவைத்தாா். அதுமுதல் துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தாமோதரன் முயற்சியில் விற்பனைக்கூடம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

அவா் முன்னிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடைபோடப்பட்டன. இதனால் கேளூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com