வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 2 மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 2 மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி

ஒரு கி.மீ. தொலைவுக்கு சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) பறக்கத் தடை விதித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, ஆரணி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இவ்விரு வாக்கு எண்ணும் மையங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் வாக்குகள் எண்ணி முடியும் வரை எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்குள் எவ்வித சிறிய ரக விமானங்களும் (ட்ரோன்கள்) பறக்கவிட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி பறக்கவிடப்பட்டால் அந்த ட்ரோன்களை பறிமுதல் செய்வதுடன், அதை பறக்கவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com