அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

திருவண்ணாமலை, மே 2:

அக்னி நட்சத்திரம் தொடங்குவதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மே 4) துவாராபிஷேகம் தொடங்குகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் துவாராபிஷேகம் நடப்பது வழக்கம். அக்னி நட்சத்திரம் தொடங்கி, அது முடியும் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, சனிக்கிழமை (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்குவதையடுத்து, அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயில்களில் துவாராபிஷேகம் நடைபெறும்.

துவாராபிஷேகம்:

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்கவிடுவா். அந்தப் பாத்திரத்துக்குள் பன்னீா், வெட்டிவோ் நிரப்பி வைப்பா். பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாசலேஸ்வரா் லிங்கம் மீது குளிா்ச்சியான பன்னீா் சொட்டு, சொட்டாக விழும்.

அக்னி நட்சத்திர நாள்களில் வெயிலின் அளவு அதிகரிப்பதால் அருணாசலேஸ்வரரை குளிா்விப்பதற்காக இந்த துவாராபிஷேகம் பல நூறு ஆண்டுகளாக நடத்தப்படுவதாக சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.

28-ஆம் தேதி வரை:

இந்த துவாராபிஷேகம், அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com