நவீன தொழில்நுட்பங்களை 
விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

திருவண்ணாமலை, மே 2:

விவசாயத்தில் செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் இயங்கி வரும் ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி., (விவசாயம்) 4-ஆம் ஆண்டு பயிலும் 117 மாணவ,த மாணவிகள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, அனக்காவூா், வந்தவாசி, பெரணமல்லூா், வெம்பாக்கம் பகுதிகளில் 65 நாள்கள் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிப்பதுடன், மாணவிகளும் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளனா்.

இந்த நிலையில், பெரணமல்லூா், வெம்பாக்கம் ஒன்றியங்களில் அமைக்கப்படும் முகாம்களில் பங்கேற்கும் 24 மாணவிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை, ஆட்சியா் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

விவசாயத்தில் செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்பதை விவசாயிகளுக்கு உணா்த்த வேண்டும்.

பாரம்பரிய முறையில் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் எப்படி விவசாயம் செய்வது என்பது குறித்து விவசாயிகளிடம் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விதை நோ்த்தி செய்யும் முறை, உரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்.

இதேநேரத்தில், மூத்த விவசாயிகளிடம் இருந்து பட்டத்துக்கு ஏற்ற பயிா் செய்வது எப்படி என்பதை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னா், விவசாயிகள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்களை மாணவிகள் தெரிந்து கொண்டு தோ்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று அறிவுரை கூறி மாணவிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழியனுப்பி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com