ஏலம் விடாததால் பாழாகும் காலாவதி அரசு வாகனங்கள்..!

அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி காலாவதியான வாகனங்களை உடனுக்குடன் ஏலம் விடாததால் அவை பல ஆண்டுகளாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன.ந.தமிழ்செல்வன்

அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி காலாவதியான வாகனங்களை உடனுக்குடன் ஏலம் விடாததால் அவை பல ஆண்டுகளாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன.
 இதனால், அரசுக்கு ஏற்பட்டு வரும் பல லட்ச ரூபாய் இழப்பைத் தடுக்க உடனடியாக அந்த வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அரசின் திட்டப் பணிகளை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிடவும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்தவும், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களையும், நலத் திட்ட பொருள்களைக் கொண்டு செல்ல லாரி, மினி லாரி போன்ற சரக்கு வாகனங்களையும், மருத்துவத் துறைக்கு ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனங்களையும் அரசு வழங்கியுள்ளது.
 இதன்படி, வேலூர் மாவட்டத்தில் வருவாய், வேளாண், பத்திரப் பதிவு, நில அளவை, காவல் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தொழிலாளர் நலத் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி, சுகாதாரத் துறை, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. 
இந்த வாகனங்களை 15 ஆண்டுகள் பயன்படுத்தியிருந்தாலோ, இரண்டரை லட்சம் கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டிருந்தாலோ, அதற்கு மேல் அந்த வாகனத்தின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும் என்பதால், காலாவதியான வாகனம் என அறிவித்து, மாவட்டங்களில் உள்ள அரசு தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அதிகாரியின் சான்று பெற்று ஓரங் கட்ட வேண்டும். 
 பின்னர், அந்த வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் சென்னையில் உள்ள அரசு தானியங்கி பணிமனையின் இயக்குநருக்கு அனுப்பி வைத்து, வாகனத்தை ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இயக்குநரின் அனுமதி கிடைத்த பிறகு, ஓரங் கட்டப்பட்ட வாகனங்களை மாவட்டத்தில் உள்ள அரசு தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத் துறை பொறியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து மதிப்பீடு செய்வர். பிறகு இயக்குனர் முன்னிலையில் மூடி முத்திரையிட்ட டெண்டர் முறையில் ஏலம் விடப்படும்.
அரசின் இந்த உத்தரவை வேலூர் மாவட்டத்தில் எந்தத் துறையிலும் முறையாக பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும், ஏலம் விடப்படாமல் வீணாகி வருகின்றன. குறிப்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படாமல் ஆண்டுக்கணக்கில் பாழாகி வருகின்றன. 
  வாகனங்கள் ஓரங்கட்டப்பட்ட ஓரிரு மாதங்களில் ஏலம் விட்டால், ஒவ்வொரு வாகனமும் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்க்காவது ஏலம் போகும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பல ஆண்டுகள் கழித்து வீணாகிய பிறகு ஏலம் விடுவதால் அவை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 அளவில் மதிப்பு குறைந்துவிடுகின்றன. இதனால் பழைய வாகனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாயும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாழாவதாக அக்கறை கொண்ட அரசு அதிகாரிகள் சிலரே தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட சில துறை வாகனங்களை மட்டுமே அரசு தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத் துறை பராமரிக்கிறது. மற்ற துறைகளின் வாகனங்களை அந்தந்த துறையினரே பராமரித்து வருகின்றனர். 
எனினும், வாகனங்களை ஓரங்கட்ட தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் சான்று பெற வேண்டும். அவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்களின் ஆவணங்களை அந்த துறையிடம் ஒப்படைத்தால்தான் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். 
 ஆனால் பல துறைகளில் வாகனங்களின் ஆர்.சி. புத்தகம் உள்பட  ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை. 
இதனால் ஏலம் விடுவதில் தாமதமாகிறது. அப்படியே ஆவணங்கள் இருந்தால் அந்த வாகனத்தை மதிப்பீடு செய்து, ஏலம்விட கோப்புகள் ஒவ்வொரு துறையாகச் சென்று இறுதியாக இயக்குநரின் அலுவலகம் செல்ல 6 மாதம் முதல் ஓராண்டாகிறது.
அதற்குள் அந்த வாகனத்தின் பெரும் பகுதி மக்கி விடுவதால், ஏற்கெனவே மதிப்பீடு செய்த தொகைக்கு ஏலம் எடுக்க எவரும் முன்வருவதில்லை. அதனால் தொகையை குறைத்து மறுஏலம்விட காலதாமதம் ஆகிறது என்றனர்.
 காலாவதி வாகனங்களை ஏலம் விடுவதால் அரசுக்கு ஏற்பட்டு வரும் பல லட்ச ரூபாய் இழப்பைத் தடுக்கவும், சில அரசு அலுவலகங்கள் பழைய வாகனங்களின் கூடாரமாக மாறி வருவதைத் தடுக்கவும் உடனடியாக அந்த வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com