அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் தடை செய்யப்படுமா? 

ராணிப்பேட்டை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும்
அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் தடை செய்யப்படுமா? 

ராணிப்பேட்டை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏர் ஹாரன்கள்) பயன்படுத்தும் வாகனங்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
மேலும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் அவ்வப்போது வாகன சோதனை மேற்கொண்டு விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை நகரம், சிப்காட், அம்மூர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களிலும் காதுகளை செவிடாக்கும் வகையிலும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் காற்றொலிப்பான் (ஏர் ஹாரன்கள்) பயன்படுத்தப்பட்டு ஒலி மாசு ஏற்படுத்தப் பட்டு வருகின்றன.
இதுபோன்ற வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு அவற்றை பறிமுதல் செய்து, எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் அதைப் பெருட்படுத்தாமல் தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மத்திய மோட்டார் வாகன விதி 119-இன்படி 89 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி அளவுள்ள ஒலிப்பான்கள் (ஹாரன்களை) பயன்படுத்தக் கூடாது. தேவை இல்லாமலும், தொடர்ச்சியாகவும் அல்லது தேவைக்கு அதிகமாகவும் ஒலியை உபயோகிக்கக் கூடாது. அமைதி காக்கும் இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்டிப்பாக அதிக ஒலியை உபயோகிக்கக் கூடாது. அதேபோல் வாகனத்துக்கு உள்ளே அதிக சப்தம் எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிக்கவிடக் கூடாது. இதை மீறினால் பொருள்களை பறிமுதல் செய்வதோடு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வாகனத்தின் முகப்பு விளக்குகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ஒளியூட்டக்கூடிய விளக்குகளைப் பொருத்துவது மற்றும் அதிக எண்ணிக்கையில் விளக்குகளை ஒளிர விடுவது, ஹாலோஜன் பல்புகளை முகப்பு விளக்குகளில் அமைப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதி முறைகள் கடைப்பிடிக்கப்படமால் வாகனங்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மோட்டார் வாகன விதியின்படி அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு முதல்முறையாக ரூ. 1,000 அபராதமும், தொடர்ந்து விதி மீறுவது கண்டறிந்தால் ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் பயன்படுத்தப்படும் காற்றொலிப்பான்களை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து, ஒலி மாசை குறைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com