பச்சிளம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க விழிப்புணர்வு

பச்சிளம் குழந்தைகள் இறப்பு, குறைப்பிரசவம் ஆகியவற்றைத் தடுக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி

பச்சிளம் குழந்தைகள் இறப்பு, குறைப்பிரசவம் ஆகியவற்றைத் தடுக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படிகுறைப்பிரசவ குழந்தைகள் தினம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.சாந்திமலர் தலைமை வகித்தார். இதில், குறைப் பிரசவத்தில் பிறந்து தற்போது நல்ல நிலைக்கு திரும்பிய பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. மேலும், குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணிகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 
இதுகுறித்து, மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் தேரணிராஜன் கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 17-ஆம் தேதி குறைப்பிரசவ குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. அவற்றில் ஒரு லட்சம் குழந்தைகள் மரணமடைவதாகவும், இதில் 60 சதவீதம் ஆசியக் கண்டத்துக்கு உள்பட்ட நாடுகளில் நிகழ்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும்போதும், பிறந்ததற்கு பிறகும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. 
அவற்றுக்கு மருத்துவச் செலவுகளும் மிக அதிக அளவில் செலவிடப்பட வேண்டியிருப்பதால், 2030-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு குறைபிரசவ இறப்பு விகிதத்தைக் குறைக்க சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதையொட்டி, தமிழகத்தில் 64 இடங்களில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டதன் விளைவாக பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
குறைப்பிரசவத்துக்கு கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்த அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு போன்றவை முக்கியக் காரணிகளாகும். இதைத் தடுத்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 799 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தன. அவற்றில் 92 சதவீத குழந்தைகள் காப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர். 
நிகழ்ச்சியில், குடியிருப்பு மருத்துவர் சி.இன்பராஜ், தலைமை மருத்துவ அலுவலர் குமரேசன், பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com