ரெளடி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சரண்

வேலூரில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வேலூரில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர், சத்துவாச்சாரி மலையடிவாரம் வஉசி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (35). ரெளடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவருக்கும், வள்ளலார் பகுதியில் சிறு உணவகம் நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது. தண்டுமாரி இந்திரா நகரில் வசித்து வருகிறார். அவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு போடி (20) உள்பட இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தண்டுமாரி வீட்டில் தலையில் கல்லைப் போட்ட நிலையில் தங்கராஜ் இறந்து கிடந்தார். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸார், அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இக்கொலையை தண்டுமாரி, அவரது மகன் போடி, உறவினர் கன்னியம்மாள் ஆகியோர் சேர்ந்து செய்திருக்கலாம் என தெரிய வந்தது. இதுதொடர்பாக, தண்டுமாரி உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். 
இந்நிலையில், தண்டுமாரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, தண்டுமாரியை காவலில் எடுத்து விசாரிக்க சத்துவாச்சாரி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள போடி, கன்னியம்மாளை பிடிக்க தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com