காட்பாடி ரயில் நிலையத்தில் ரூ. 35 லட்சத்தில் மின்தூக்கி அமைப்பு

காட்பாடி ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக ரூ. 35 லட்சம் செலவில்

காட்பாடி ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக ரூ. 35 லட்சம் செலவில் மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
வேலூர் மாநகரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில், அருகிகே உள்ள காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட புண்ணியத் தலங்களுக்கும், சி.எம்.சி. மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ரயில்கள் மூலமாக வந்து செல்லும் இவர்கள், காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக காட்பாடி ரயில் நிலையத்தின் நடைமேடை 1-இல் மின்தூக்கி (லிஃப்ட்) அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2-ஆவது நடைமேடையிலும் மின்தூக்கி (லிஃப்ட்) அமைக்க பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று அரக்கோணம் எம்.பி.அரி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 35 லட்சத்தை ஒதுக்கினார். இதையடுத்து நடைமேடை 2-இல் மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்தூக்கி யின் செயல்பாட்டை அமைச்சர் கே.சி.வீரமணி வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
ஒரேநேரத்தில் 13 பயணிகள் வரை செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்தூக்கி மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி.அரி, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தெற்கு ரயில்வே கூடுதல் மண்டல மேலாளர் கே.மனோஜ், வணிகப்பிரிவு மேலாளர் ஹரி,  காட்பாடி ரயில் நிலைய அலுவலர் கே.ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com