கடந்த 3 ஆண்டுகளில் கொடைக்கல் கிராமத்துக்கு ரூ. 2.96 கோடியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்

கடந்த 3 ஆண்டுகளில் கொடைக்கல் கிராமத்தில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் கொடைக்கல் கிராமத்தில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
வாலாஜாபேட்டை வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடைக்கல் கிராமத்தில் எம்.பி. தொகுதி கிராமத் தத்தெடுப்பு திட்ட தொடக்கம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கொடைக்கல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
நாட்டில் உள்ள கிராமங்களை வளர்ச்சியடைந்த, சுயசார்பு மிக்க கிராமங்களாக மாற்றும் நோக்கில் ஒவ்வொரு எம்.பி.யும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதன்படி, அரக்கோணம் எம்.பி.அரி கடந்த ஓர் ஆண்டுக்கு முன் கொடைக்கல் கிராமத்தைத் தத்தெடுத்தார். அதன் தொடர்ச்சியாக, இக்கிராமத்துக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என ஆய்வு செய்து பணிகள் தொடங்க அனைத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டிருந்தார்.
இந்த ஆய்வின்படி குடிநீர், பள்ளிச் சுற்றுச்சுவர், கழிப்பறை, சாலை, வீடற்றவர்களுக்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், இந்தக் கிராம மக்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மகளிர் சுய  உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் ஆகியவை வழங்க உறுதி  செய்யப்பட்டது.
அதன் பயனாக மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 130 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், 11 பசுமை வீடுகள் மற்றும் இங்குள்ள ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறைகள் உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட   உள்ளன. 
கடந்த 3 ஆண்டுகளில் கொடைக்கல் கிராமத்தில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இங்கு ரூ. 88 லட்சத்தில் புதிய சமுதாயக் கூடம் ஒன்று கட்டப்பட்ட உள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, அரக்கோணம் எம்.பி.அரி, வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான  சு.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர்  ருத்திரமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட திட்ட இயக்குநர் பெரியசாமி, மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், கோட்டாட்சியர் வேணுசேகரன், வட்டாட்டசியர் பூமா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர்கள் ச.கார்த்திகேயன் (ஜம்புகுளம்), சி.அசோகன் (கொடைக்கல்),  மாவட்ட  பாசறைச் செயலாளர் ஏ.எல்.விஜயன், தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கா.முல்லை வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com