நவ.30 முதல் குடிநீர், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கத் தடை

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் குடிநீர், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட


வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் குடிநீர், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், மாற்று பொருள்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்த்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடில்லாத பகுதி என்ற அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் நவம்பர் 30-ஆம் தேதி முதலே குடிநீர், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவு தடை விதித்துள்ளது. நவம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குடிநீர், உணவுப் பொருள்கள் அடைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:
பொதுவாக குடிநீர், உணவுப் பொருள்களின் காலாவதி காலம் அதிகபட்சம் ஒரு மாதமாகும். ஏற்கெனவே, ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளதால், உணவுப் பொருள்களுக்கும், குடிநீருக்கும் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நவம்பர் 30-ஆம் தேதிக்குள் படிப்படியாக குடிநீர், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதை நிறுத்திவிட வேண்டும். அதன்பிறகும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com