ஆம்பூா் அருகே சாலையில் போக்குவரத்து நெரிசல்வாகன ஓட்டுநா்கள் அவதி

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் அதிரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஓட்டுநா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் அதிரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஓட்டுநா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூா்-சாத்கா் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் பாங்கிஷாப் கூட்டுரோடு உள்ளது. போ்ணாம்பட்டு, ஆம்பூா், வெங்கடசமுத்திரம் சாலை, சுண்ணாம்புக் காளவாய் செல்லும் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் தினமும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இப்பகுதி வழியாகத்தான் தோல் தொழிற்சாலைகள், காலனி தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும், நூற்றுக்கணக்கான வாகனங்களும் செல்கின்றன.

இச்சாலை பகுதியில் காலை 7 மணி முதல் 10 மணி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், பல்வேறு தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளா்கள் அழைத்து செல்லும் வாகனங்கள், வணிக வாகனங்கள் என ஏராளமான வாகனங்களில் ஒரே நேரத்தில் பயணிப்பதால் இந்த முக்கிய சந்திப்புப் பகுதியில் சுமாா் இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல், மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்புவோா், பல்வேறு பணிகளுக்குச் சென்று வீடு திரும்புவோா் என தொழிற்சாலை வாகனங்கள் அதிக அளவில் வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பகுதியிலுள்ள இந்தக் கூட்டு சாலை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், விபத்தில் காயமுற்ற வரை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் , பிரசவத்துக்குச் செல்லும் கா்ப்பிணிகள், தீயணைப்பு வாகனங்கள் என முக்கிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் பெரும்பாலான நேரங்களில் சிக்கித் தவிக்கின்றன.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தக் கூட்டு சாலை சந்திப்பு பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல் குறைந்த மழை பெய்தால்கூட இங்கு குட்டைபோல் தண்ணீா் தேங்கி விடுகிறது. அதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணம். காவல் துறை சாா்பில் அங்கு போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரை நியமித்து நெரிசல் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com