கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட நாட்டுக் கோழிகள் பலி

வாணியம்பாடி அருகே கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட நாட்டுக் கோழிகள் இறந்து கிடந்ததால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.  

வாணியம்பாடி அருகே கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட நாட்டுக் கோழிகள் இறந்து கிடந்ததால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். 
தமிழக அரசு சார்பில் கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, ரூ. 7 ஆயிரம் மதிப்பில் தலா 50 நாட்டுக் கோழிகள் மற்றும் அதற்கான வளர்ப்புக் கூண்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 
அதன்படி, வாணியம்பாடி, ஆலங்காயம், மாதனூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள 316 பெண் பயனாளிகளுக்கு தலா 50 கோழிகள் வழங்க ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தது. 
இதில், ஆலங்காயம் ஒன்றியம், ஜாப்ராபாத் பகுதியில் கால்நடை மருந்தகம் அலுவலக வளாகத்தில் பள்ளிப்பட்டு, தேவஸ்தானம், மதனாஞ்சேரி, ஜாப்ராபாத் பகுதிகளைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அட்டைப் பெட்டிகளில் தலா 50 கோழிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை திருப்பத்தூர் கோட்ட கால்நடை உதவி இயக்குநர் நாசர், ஜாப்ராபாத் கால்நடை மருத்துவர் சோம்சந்தன் ஆகியோர் வழங்கினர். 
வழங்கப்பட்ட அட்டைப் பெட்டிகளைப் பிரித்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் 5 முதல் 10 கோழிகள் இறந்து கிடந்ததைக் கண்டு பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சரிவர பதில் கூறாமல் சென்றுவிட்டனராம். இதேபோல் அம்பலூர், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட கோழிகளுடன் ரூ. 2,500 மதிப்பிலான கோழி வளர்ப்புக் கூண்டுகளை ஒரு சிலருக்கு மட்டும் வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு அதற்கான தொகை வங்கியில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து இறந்த கோழிகளை ஜாப்ராபாத் கால்நடை மருத்துவ அலுவலக வாசலில் பயனாளிகள் வீசிவிட்டுச் சென்றனர். 
இதுதொடர்பாக திருப்பத்தூர் கோட்ட கால்நடை உதவி இயக்குநர் நாசர் கூறியது: உயிரிழந்த கோழிகளுக்குப் பதிலாக மாற்றுக் கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆலங்காயம், மாதனூர், திருப்பத்தூர், கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகளைத் தேர்வு செய்து, கோழிகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com