2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடு கண்டெடுப்பு
By DIN | Published On : 22nd August 2019 02:31 AM | Last Updated : 22nd August 2019 02:31 AM | அ+அ அ- |

ஏலகிரி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஆ. பிரபு, சு.சிவசந்திரகுமார், ஆய்வு மாணவர்களான பொ.சரவணன், ரா.சந்தோஷ் ஆகியோர் ஏலகிரி மலைச் சரிவில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் வனப் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான குறியீட்டுடன் கூடிய பானை ஓடு மற்றும் பயன்படு பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியது:
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள மலையடிவார கிராமம் குண்டுரெட்டியூர். தற்போது மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் விவசாய நிலங்களில் உழவுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட மேற்பரப்புக் கள ஆய்வு மேற்கொள்ள அவ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்தன. அதாவது, உடைந்த சுடுமண் புகைப்பான், குறியீட்டுடன் கூடிய கருப்பு சிவப்பு பானை ஓடு, தந்தத்தால் ஆபரணம் செய்கையில் எஞ்சிய துண்டு, நெசவு செய்யப் பயன்படும் தக்ளி, சுடுமண் மணிகள், வண்ணம் தீட்டப்பட்ட களிமண் ஜாடிகளின் கைப்பிடி, சுடுமண் தாங்கிகள் ஆகிய அரிய பொருள்கள் கிடைத்தன.
நூல் நூற்கும் தக்ளி...
ஆபரணங்கள் செய்ய பயன்பட்ட சுடுமண் மணிகளும் இங்கு கிடைத்துள்ளன. ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்துக்கு முன் கையாலே நூல் நூற்கப் பயன்பட்ட சுடுமண் தக்ளி கிடைத்திருப்பது இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நெசவுத் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது.
தந்தத்தால் ஆன ஆபரணத்தின் எஞ்சிய துண்டு
பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பல பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்திக் கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவ்வகையில், இங்கு அறுத்தெடுக்கப்பட்டு ஆபரணம் செய்கையில், எஞ்சிய தந்தத்தின் ஒரு துண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த கள ஆய்வுப் பொருள்கள் குறித்து தொல்லியல் துறை உதவி இயக்குநர் ர.பூங்குன்றன் கூறுகையில், பானைக் குறியீட்டில் உள்ள கீறல் நீர் வாழ் உயிரினமான முதலை, மீன், ஆமை இவற்றில் ஒன்றினைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இவை வளமையின் குறியீடாகும். இப்பானை ஓடானது, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.
வரலாற்றுப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான சேகர் கூறுகையில், இங்கு கிடைத்த பொருள்கள் கவனத்துக்கு உரியவையாகும். ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை. தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள உகந்த களமாக இவ்விடம் தெரிகிறது. சங்க கால மக்கள் வாழ்ந்த இடமாக இந்த இடம் அறியப்படுகின்றது என்றார்.
வட தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றிட, தமிழர்களின் வாழ்வியலை இவ்வுலகுக்கு உணர்த்திட தமிழக அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
குறியீட்டுக் கீறல் உள்ள பானை...
இப்பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது குறியீட்டுக் கீறல் அடங்கிய பானை ஓடாகும். இப்பானை ஓட்டில் அரிய வகைக் குறியீடு கீறப்பட்டுள்ளது. அதன் கீழே வண்ணச் சாந்தினால் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
இக்கீறல் குறிக்கும் பொருள் என்னவென்று உறுதியாகக் கூற இயலவில்லை. கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட இப்பானை ஓடானது ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பழைமையானதாகும். அதாவது சங்க காலத்தைச் சேர்ந்த மக்களின் பயன்படு பொருளாகும்.
ஏலகிரி அருகே கண்டெடுக்கப்பட்ட குறியீட்டு பானை ஓடு.