மேல்மொணவூர் பாலாற்றில் மணல் அள்ள அனுமதி

வேலூர் அருகே மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து

வேலூர் அருகே மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் மணல் அள்ளும் பணி தொடங்கியுள்ளது. தினம் ஓர் ஊர் என்ற அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டதால் மாவட்டம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் கடும் பாதிப்படைந்தன. மணல் தட்டுப்பாட்டைப் போக்க மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 
அதனடிப்படையில், பாலாற்றில் இருந்து மேல்மொணவூர் பகுதியில் மாட்டு வண்டிகளிலும் விரிஞ்சிபுரம் அருகே லாரிகளிலும் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் அள்ளுவதற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
இதன்படி, மேல்மொணவூர் பாலாற்றில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கான அனுமதி வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணியில் இருந்தே நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மணல் அள்ளிச் செல்வதற்காக பாலாற்றில் 
குவிந்தன. ஒவ்வோர் மாட்டு வண்டிக்கும் ரசீது போட்டு மணல் அள்ள அனுமதியளிக்கப்பட்டது. 
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: மேல்மொணவூரில் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாட்டு வண்டியில் கால் யூனிட் மணல் மட்டுமே நிரப்ப முடியும். அதற்கு கட்டணமாக ரூ.100-ம், ஜிஎஸ்டி ரூ.5 என மொத்தம் ரூ.105 வசூலிக்கப்படுகிறது. இந்த குவாரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும். ஓர் ஆண்டுக்கு மட்டுமே இந்த குவாரியில் இருந்து மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 500 கனமீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே நேரத்தில் குவிவதைத் தடுக்க ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்ற அடிப்படையில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 
முதல் நாள் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 நாட்களும், அதைத்தொடர்ந்து வேலூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், அதற்கு அடுத்த நாள் திருமணி அதைச் சுற்றியுள்ள பகுதியினருக்கும் மணல் விநியோகிக்கப்படும். 
இதேபோல், சுழற்சி முறையில் மணல் விநியோகம் செய்யப்படும். முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க ஒரு மாட்டுவண்டிக்கு ஒருமுறை மட்டுமே ரசீது அளிக்கப்படுகிறது என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com