மர்ம நோயால் வெள்ளாடுகள் இறந்த சம்பவம்: ஆம்பூர் பகுதியில் கால்நடை, சுகாதாரத் துறையினர் ஆய்வு

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து கால்நடை மற்றும்

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னியநாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக  மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட  வெள்ளாடுகள் இறந்தன.
இந்நிலையில், மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடை துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத் துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குநர் மருத்துவர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ரமேஷ்குமார், பிரவீண்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத் துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வுப் பிரிவு இணை இயக்குநர் ஸ்ரீஹரி கூறியது:
வழக்கத்தைக் காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக் கூடாது. கூரை வேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும். ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும்.  உணவுக்காக சம்பந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது என்றார் அவர்.
மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளைப் பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com