அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 05th January 2019 11:47 PM | Last Updated : 05th January 2019 11:47 PM | அ+அ அ- |

தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சி கிராம மக்கள் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பாராஞ்சி ஊராட்சி. அரக்கோணம் அருகே உள்ள இக்கிராமத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லையாம். இக்கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம், நூலகம் இரண்டிலும் கட்டடங்கள் சீரமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை கிராம மக்கள் காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரக்கோணம் வட்டாட்சியர், ராணிப்பேட்டை கோட்டாட்சியர், அரசுப் போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொது மேலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
அதையடுத்து அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் சனிக்கிழமை பாராஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மன்றத்தின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில், செயலர் கோ.ஆழ்வார், மன்ற ஆலோசகர்கள் சி.கருணாநிதி, சி.வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.