இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தங்களுடைய திறமையை


இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தங்களுடைய திறமையை சூழ்நிலைகளை காரணம் காட்டி வெளிப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
நேரு யுவகேந்திரா சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக வேலூரில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து விவேகானந்தரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியது:
சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு பிறந்தார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர், தனது 18-ஆவது வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த பிறகு பக்தி மார்க்கமும், ஆன்மிகமும் இந்தியாவுக்குத் தேவை என்று உணர்ந்தார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ராமகிருஷ்ண மடத்தை உருவாக்கினார். தனது வாழ்நாளை நாட்டின் முன்னேற்றத்துக்காக தியாகம் செய்தார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா போன்ற உலக நாடுகள் முழுவதும் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றி இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தார். மேலும் இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது சித்தாந்தப் பேச்சாற்றல் இளைஞர்களை கவர்ந்தது. இதனால் உலக நாடுகள் முழுவதும் ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் சமூகத் தொண்டாற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். 
இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். எனவே, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தங்களுடைய திறமையை சூழ்நிலைகளை காரணம் காட்டி வெளிப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது. தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து இளைஞர்கள் முயற்சி செய்து வெற்றி பெற்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
விழாவில் தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 40 இளைஞர்களுக்கு ரூ.2.40 லட்சத்துக்கான பரிசுகள், சான்றிதழ்கள், விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயாராவ், மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com