மழலையர் வகுப்புகளுக்கு 171 நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை

வேலூர் மாவட்டத்தில் 171 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான மாணவர்

வேலூர் மாவட்டத்தில் 171 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மூன்றரை வயது நிறைவடைந்த குழந்தைகளை இந்த வகுப்புகளில் சேர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்  மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும்  2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 444 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 171 பள்ளிகளில் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது. அங்கன்வாடி மைய குழந்தைகள் மட்டுமின்றி மூன்றரை வயது நிறைவடைந்த குழந்தைகள் எல்.கே.ஜி வகுப்புகளிலும், நான்கரை வயது நிறைவடைந்த குழந்தைகள் யு.கே.ஜி. வகுப்புகளிலும் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தக் குழந்தைகளுக்கு கற்றல் திறன், பேசுதல், எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட ஆரம்பக் கல்வி அளிக்கப்படுவதுடன், தலா 6 செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளதாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: வேலூர் மாவட்டத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும் 171 நடுநிலைப் பள்ளிகளிலும் தலா ஒரு ஆசிரியர் இந்த மழலையர் வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் புதிதாக அல்லாமல் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் இடமாறுதல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு மாநில ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் மூலம் 5 நாள்களுக்கு மாண்டிச்சோரி கற்பித்தல் பயிற்சியும், கற்பிக்கும் உபகரணங்கள், கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. தற்போது வகுப்புகள் தொடங் குவதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
இதனிடையே, காட்பாடி ஒன்றியம், கே.வி.குப்பம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப்புகளை காட்பாடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜி.எம்.மோகனரெட்டி, ஜே.ஆர்.ரூபிசுஜாதா ஆகியோர் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர், தலைமையாசிரியர் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான சேர்க்கை நடப்பது குறித்து துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com