இந்தியக் குடியுரிமை வழங்குமாறு இலங்கை அகதிகள் கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இலங்கை அகதிகள் அளித்த மனு விவரம்:
வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 3,300 பேர் வசித்து வருகின்றனர். 1990-ஆம் ஆண்டு முதல் இதுவரை 30 ஆண்டுகளாக வசித்து வரும், இலங்கை  அகதிகளுக்கு குடும்ப அட்டை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 
ஆனால், வாக்குரிமை வழங்கப்படவி ல்லை. சுதந்திரமாக  எங்கும் செல்ல முடிவதில்லை. எனவே, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காட்பாடியை அடுத்த அருப்புமேடு கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: 
அருப்புமேடு கிராமத்தில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான பகுதியில் விளையாட்டுத் திடல் உள்ளது. இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவம், காவல்துறைப் பணிகளுக்கு செல்ல உடற்பயிற்சி செய்வது வழக்கம். மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களும் விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டடப் பணிகளுக்கான பொருள்களை வைத்து நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
இதுதொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
கொணவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில் "கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் பள்ளிப்படிப்பை முடித்த எங்களுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. எனவே, எங்களுக்கும் மடிக்கணினி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர். 
வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், மழைநீரைச் சேகரிக்கவும் ஏரி, குளங்கள், கண்மாய்களைத் தூர்வார வேண்டும். 
இந்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, மின்இணைப்பு, பேருந்து வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com