கன மழை: ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கிய தண்ணீர்: பொதுமக்கள் அவதி

ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கன மழை காரணமாக ரயில்வே குகைவழிப் பாதையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கன மழை காரணமாக ரயில்வே குகைவழிப் பாதையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஆம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் இடைவிடாது பெய்த பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. தெருக்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ஓடியது. சூறாவளிக் காற்றால் விளம்பரப் பதாகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல் ஆம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பலத்த மழையால் ரெட்டித்தோப்பு பகுதிக்குச் செல்லும் ரயில்வே குகைவழிப் பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் வழி இல்லாமல் தத்தளித்தனர். மேலும், குகைவழிப் பாதையில் தண்ணீர் வெளியே செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அதன் வழியே எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. 
இதனால், அப்பகுதிக்கு உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், ஜூலை 11: குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
வியாழக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. மாலை திடீரென அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. பாண்டியன் நகரில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாயினர். கே.வி. குப்பம் பகுதியிலும் மிதமான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com