நளினி ஓரிரு நாளில் பரோலில் வெளியே வருவார்: வழக்குரைஞர் புகழேந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி ஓரிரு நாளில் பரோலில் சிறையிலிருந்து வெளியே வருவார் என அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி ஓரிரு நாளில் பரோலில் சிறையிலிருந்து வெளியே வருவார் என அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.
இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள அவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினி-முருகனின் மகள் ஹரித்ரா என்ற மேகரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். 
தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தனக்கு 6 மாத பரோல் வழங்குமாறு கோரி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்நிலையில், வேலூர் சிறையில் நளினியை அவரது வழக்குரைஞர் புகழேந்தி  சனிக்கிழமை சந்தித்தார். நளினியின் பரோல் தொடர்பான சில ஆவணங்களை புகழேந்தி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஓரிரு நாளில் நளினி பரோலில் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நளினியை பரோலில் விடுவிக்க இரண்டு பேர் ஜாமீன் வழங்க வேண்டும். அதன்படி ஜாமீன் அளிக்க முன்வந்தவர்களின் இருப்பிடச்சான்று, அடையாளச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜாமீன் அளிப்பதற்கான ஒப்பதல் கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளோம்.
பரோலில் வரும் நளினி வேலூர் அல்லது சென்னையில் தங்கும் முகவரியை அளித்துள்ளோம். இதில், எந்த இடத்தில் நளினி தங்க வேண்டும் என்ற முடிவை சிறை நன்னடத்தை அதிகாரிகள், சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவு செய்வார்கள். அதன் பிறகே நளினி பரோலில் விடுவிக்கப்படுவார். சென்னையில் தங்க அனுமதி கிடைத்தால் நல்லது என்று நளினி விரும்புகிறார். 
எனினும் சிறை அதிகாரிகள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். திருமணம் நடக்க உள்ள நேரத்தில் முருகனுக்கு பரோல் கோரத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கிடையில், இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேர் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எனவே, விரைவில் விடுதலை சாத்தியமாகும் சூழல் இருப்பதால் தற்போதைக்கு பரோல் வேண்டாம் என முருகன் கூறியுள்ளார். திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி - முருகனின் உறவினர்கள் பேசி வருகின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஹரித்ரா சென்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு மாதம் பரோல் கிடைத்ததில் நளினி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கு உதவியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com