திமுகவினர் மேடை நாகரிகமின்றி பேசுகின்றனர்: அமைச்சர் பி.தங்கமணி

திமுகவினர் மேடை நாகரிகமின்றி பேசிவருவதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி குற்றம் சாட்டினார்.

திமுகவினர் மேடை நாகரிகமின்றி பேசிவருவதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி குற்றம் சாட்டினார்.
குடியாத்தம் சந்தப்பேட்டையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி நேரிடையாக மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் திமுகவினரோ, மேடை நாகரிகம் இல்லாமல் பேசி வருகின்றனர். தமிழக அரசு குறித்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர். 
திமுக கூட்டணியைச் சேர்ந்த 37 பேர் மக்களவை உறுப்பினர்களாகியும், அவர்களால் மத்திய அரசு மூலம் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். அதிமுக கூட்டணியில் மத்திய, மாநில அரசுகளின் வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெற வைத்தால் மத்திய அரசிடம் போதிய நிதி பெற்று வேலூர் தொகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றார். தொடர்ந்து காமாட்சியம்மன்பேட்டை, நெல்லூர்பேட்டை, பேர்ணாம்பட்டு சாலை, நேதாஜி சவுக், மேல்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கே.வி.குப்பம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரம் குறித்து அதிமுக தொண்டர்களுடன் வெள்ளிக்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார். 
அப்போது, கடந்த தேர்தலில் திமுக கூட்டணி மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி வெற்றி பெற்றுவிட்டனர். அது உண்மையான வெற்றி அல்ல. ஆனால், வேலூர் மக்களவைத் தொகுதியில் அதற்கு இடமளிக்கவிடாமல் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றார். எம்எல்ஏ இன்பதுரை, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், தேமுதிக மாவட்டச் செயலர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு தேர்தல் ஆலோசனை வழங்கிப் பேசினார்.
முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், ஆம்பூர் தொகுதி முன்னாள் செயலர் ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அமைச்சர் ஜெயக்குமார்
வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: 
முத்தலாக் சட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலையான முடிவை எடுத்தார். அதுதான் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. 
திமுக ஆட்சிக் காலத்தில்தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திரத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். தற்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகளை உயர்த்தி கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் இதைத் தடுக்க தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றார். 
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், உயர்கல்வித் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ...
ஆடிக்கிருத்திகையையொட்டி, ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பாலமுருகனடிமை சுவாமிகள் பிரசாதம் வழங்கினார். 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com