பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி காவல் நிலையத்தில் கையெழுத்து

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நளினி, சிறைத் துறை

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நளினி, சிறைத் துறை நிபந்தனைகளுக்கு உள்பட்டு வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய நளினிக்கு  ஒருமாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதன் அடிப்படையில், நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். 
தற்போது அவர் வேலூர் ரங்காபுரம் புலவர் நகரிலுள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார். நளினி தங்கியுள்ள வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர, பரோல் காலத்தில் நளினி வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் ஒருமுறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 நிபந்தனைகள் விதித்து சிறைத் துறை உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு கையெழுத்திட்டார். பின்னர், அவர் வீடு திரும்பினார். 
பரோல் காலத்தில் நளினி அரசியல் பிரமுகர்களையோ, செய்தியாளர்களையோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளதால், அவர் காவல் நிலையத்துக்கு வந்து செல்லும் வரை யாருடனும் பேசவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com