திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
By DIN | Published On : 30th July 2019 07:54 AM | Last Updated : 30th July 2019 07:54 AM | அ+அ அ- |

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கதிர்ஆனந்தை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாணியம்பாடி தொகுதிக்குள்பட்ட அம்பலூர், எக்லாஸ்புரம், கொடையாஞ்சி, சிக்கணாங்குப்பம், தும்பேரி, வாணியம்பாடி காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை தேர்தல் திண்ணை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது பொதுமக்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை, திண்ணைகளில் அமர்ந்து பிரசாரம் செய்தார். அம்பலூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களிடம் அவர்களிடமிருந்து தேங்காய் வாங்கி அதனை உரித்தவாறு வாக்கு கேட்டார். கிராம பகுதிகளில் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களுடன் "செல்பி' எடுத்துக் கொண்டார்.
வாணியம்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி, நாட்டறம்பள்ளி ஒன்றிய திமுக செயலர் என்.கே.ஆர். சூரியகுமார், திமுக, காங்கரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்று வீடுவீடாக வாக்குகளைச் சேகரித்தார். பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஆம்பூர் நகரச் செயலர் எம்.ஆர்.ஆறுமுகம், நிர்வாகிகள் பழனி, குணசேகரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாவூர் நசீர் அஹமத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.