வேலூருக்கு வந்த நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூருக்கு வியாழக்கிழமை

நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூருக்கு வியாழக்கிழமை வந்தது. இந்தப் பேருந்தில் இடம்பெற்றுள்ள அறிவியல் கண்காட்சியை பார்வையிட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மத்திய அரசின் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சில் (எம்சிஎஸ்எம்), திருப்பதி அறிவியல் மையம் இணைந்து நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்தை வடிவமைத்துள்ளன. இப்பேருந்து தமிழகத்திலேயே முதன்முதலாக வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை வந்தது. 
இதில் பசுமை வீடுகளால் ஏற்படும் பயன்கள், சூழலியல் அமைப்புகளில் ஆற்றல், பல்லுயிர் வகைமை, உயிரிகோளம், உயிரிஎரிபொருள், ஆற்றல் பாதுகாப்பு, மரபு சாரா ஆற்றல்  மூலங்கள், ஊட்டச்சத்து சுழற்சி, கடல்மாசு, மண் மாசு, காற்று மாசு, அழிந்துவரும் உயிரினங்கள், வளிமண்டலம், பூமிக்கு வெளியேயான சுற்றுச்சூழல், கதிரிவீச்சும் ஆரோக்கியமும் என 20 வகையான சுற்றுச்சூழல் காட்சிப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.முத்துக்குமார் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் துரைராஜ், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் 
செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சா.மார்ஸ் தொடங்கி வைத்து அறிவியல் விளக்கக் கையேட்டை வெளியிட்டார்.
இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பள்ளிக்கு 2 நாள்கள் வீதம் அறிவியல் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய நிர்வாகிகள் டி.கந்தவேல்ராஜா, எஸ்.செல்லசாமி, பி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com