ஜூலை 31-க்குள் குப்பைத் தொட்டிகள் அகற்றப்படும்: ஆம்பூர் நகராட்சி ஆணையர் தகவல்
By DIN | Published On : 24th June 2019 07:04 AM | Last Updated : 24th June 2019 07:04 AM | அ+அ அ- |

ஆம்பூர் நகரில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் ஜூலை 31-க்குள் முழுவதுமாக அகற்றப்படும் என நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
அதிக அளவில் குப்பை உருவாகக் கூடிய வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் கூறியது:
திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 மற்றும் துணை விதிகளின் அடிப்படையில் வரும் ஜூலை 31-க்குள் ஆம்பூர் நகரில் உள்ள குப்பைத் தொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட உள்ளன. தற்போது குப்பைத் தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு குப்பைத் தொட்டிகள் அகற்றப்படும் இடத்தில் வண்ணக் கோலம் போடப்பட்டு, நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகம் வண்ணப் பொடி மூலம் எழுதப்படும். மேலும் குப்பை கொட்டக் கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்படும்.
தினமும் 100 கிலோ அளவுக்கு குப்பைகள் உருவாகக் கூடிய வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களே உரம் தயாரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்தி மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்க வேண்டும்.
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை சேகரிக்க பச்சை மற்றும் நீல நிறக் கூடைகளை பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்-2016 மற்றும் துணை விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.